திரைக்குப் பின்னால் நடக்கும் இழுபறி ஆட்டங்களையும், பெரிய நட்சத்திரங்களின் சுமார் படங்களையும் தாண்டி தமிழ்த் திரைப்படங்கள் நன்றாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. 2016-லும் வழக்கம் போலச் சில பெரிய நடிகர்களும் இயக்குநர்களும் சில சொதப்பல்களைச் சந்தித்தார்கள். சராசரியான திரைப்படங்கள் கொண்டாடப்பட்ட போது, சில நல்ல கலைஞர்கள் தங்கள் வித்தியாசமான படைப்புகளை வெளியே கொண்டு வரவே சிரமப்பட்டார்கள். இருந்தாலும் 2016-ல் தமிழ் சினிமா சில கருத்தான படங்களையும், நல்ல ஜனரஞ்சகமான படங்களையும் தந்தது. நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குநர்கள் வெற்றிமாறனும், மணிகண்டனுமே சென்ற வருடத்தில் தமிழ் சினிமாவைக் காப்பாற்றியவர்கள் என்று சொல்லலாம். இது இப்படி இருக்க, ராம், தியாகராஜன் குமாரராஜா, மிஸ்கின், மணிரத்னம், வெற்றிமாறன், ஷங்கர் என்று குறிப்பிடத்தக்க இயக்குநர்களின் படங்கள் 2017-இன் மேல் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இப்போதைக்கு, 2016-இல் என்னைக் கவர்ந்த 15 சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் எவை எனப் பார்ப்போம்.
15. அவியல்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பெஞ்ச் டாக்கீஸ் இரண்டாவதாக வெளியிட்ட குறும்படங்களின் தொகுப்புதான் அவியல். அதிக ஆடம்பரமோ பிரம்மாண்டமோ இல்லாமல் தயாரிக்கப் பட்டிருந்தாலும், இளம் படைப்பாளிகள் வித்தியாசமான களங்களைத் தேர்ந்தெடுத்து இயக்கி இருக்கும் துணிச்சல் தான் அவியலின் சிறப்பு. இதில் உள்ள நான்கு குறும்படங்களில் என்னைப் பெரிதும் கவர்ந்த படம் அல்ஃபோன்ஸ் புத்தரனின் எலி (aka Rat) தான். 2011-இல் நிவின் பாலி நடிப்பில் வெளியானது இந்தப் படம். அவியலில் பொதுவாக அனைவரின் நடிப்பும் பாராட்டக்கதாக இருப்பினும் முதல் குறும்படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்கள் தங்கள் நடிப்பால் மனதைக் கவர்கின்றனர்.
14. 24
நடிகர் சூர்யா சமீபத்தில் வரிசையாக நடித்த சொதப்பல்களுக்கிடையே இயக்குநர் விக்ரம் குமாரின் 24 ஒரு ஆறுதலான புத்துணர்ச்சியை அளித்தது. இதனால் சூர்யா தன்னை மீண்டும் நிரூபித்து விட்டார் என்றோ 24 தமிழின் சிறந்த அறிவியில் புனைவுத் திரைப்படங்களில் ஒன்று என்றோ சொல்லிவிட முடியாது. பிரம்மாண்டமாகத் தயாரிக்கப் பட்டிருந்தாலும் திரைக்கதையில் நிறைய ஓட்டைகள் நிறைந்ததாகவே இந்தப் படம் இருந்தது. இருந்தாலும், பரபரப்பான கட்டங்கள் சிறப்பாகக் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது இரசிக்க வைத்தது. விக்ரம் குமார் மட்டும் படத்தில் இருந்த மசாலா அம்சங்களை (காதல் மற்றும் செண்டிமெண்ட்) இன்னும் கொஞ்சம் லாவகமாகக் கையாண்டிருந்தால் இந்தப் படம் 2016-இன் நேற்று இன்று நாளை போல ஆகியிருக்கும். மொத்தத்தில் ஒரு பெரிய நட்சத்திரத்தை வீணடிக்காமல் பயன்படுத்தியதற்காகவே இந்தப் பட்டியலில் 24 இடம் பிடித்து விடுகிறது.
13. உறியடி
இயக்குநர் விஜய்குமாரின் சின்ன பட்ஜெட் அறிமுகமான உறியடி பல பாராட்டத்தக்க அம்சங்களைக் கொண்டதாகவே இருந்தது. பல இளம் தமிழ் இயக்குநர்களைப் போல விஜய்குமாரும் கல்லூரியையே களமாக எடுத்துக் கொண்டிருந்தாலும், அதில் நுணுக்கமான ஒரு கதையைச் சொல்கிறார். படத்தில் திணிக்கப் பட்ட காதலோ, சுமாரான நகைச்சுவையோ, எந்த வியாபாரத் தன்மையும் இல்லை: நடிகர்களின் நடிப்பில் கொஞ்சம் அனுபவமின்மை தெரிந்தாலும் படத்தை அது பெரிதாகப் பாதிக்கவில்லை. படத்தில் வரும் நான்கு கல்லூரி மாணவர்களின் கதாபாத்திரங்களும் உண்மையான கல்லூரிப் பசங்களைப் போலத்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் கிளைமேக்ஸில் இருக்கும் கனமான, கொடூரமான வன்முறை கொஞ்சம் முகம் சுளிக்க வைத்துவிடுகிறது. பழிவாங்குதல் படமாகவே இருந்தாலும் இந்த அளவு வன்முறையைப் பயன்படுத்தி இருக்க வேண்டாம். இதனால் படம் சொல்ல வரும் சமூகக் கருத்து வலுவிழந்து போகிறது.
12. பிச்சைக்காரன்
சசியின் பிச்சைக்காரன் (aka Beggar) மிகச் சோகமான களத்தைக் கொண்டது. ஒரு பணக்காரத் தொழிலதிபரின் தாய் ஒரு விபத்தில் சிக்கிக் கோமாவுக்குச் செல்கிறார். மருத்துவர்களும் கையை விரித்து விடுகிறார்கள். பாசமான மகன் ஒரு ஆன்மீக குருவை நாட, அவர் அவனை 48 நாட்களுக்குப் பிச்சைக்காரனாக வாழச் சொல்கிறார். தன் நிஜ அடையாளத்தை இந்த 48 நாட்களுக்கு அவன் யாருக்கும் காட்டக் கூடாது. இந்த மாதிரியான ஒரு களத்தில் வழக்கமாக நாம் எதிர்பார்க்கும் அபத்தங்களில் இருந்து சசியின் திரைக்கதை வெகு தூரம் விலகியே இருக்கிறது. கதை சொல்லலில் குறைகிற ஆழத்தை நேர்த்தியான கதை நகர்த்தலில் சரி செய்து விடுகிறார் சசி. தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடிகர் என்று பல வேடங்களை அணியும் விஜய் ஆண்டனி ஒரு நடிகராகத் தன் எல்லைகளை நன்கு உணர்ந்து அதிகமான உணர்ச்சியோ, ஹீரோயிஸமோ காட்டாமல் நடித்திருக்கிறார்.
11. சேதுபதி
அருண் குமாரின் சேதுபதி படத்தில் தமிழ் சினிமா அதிகமாகக் கண்டு சலித்துப் போன இரண்டு விஷயங்கள் இருக்கின்றன – நேர்மையான போலீஸ் மற்றும் மதுரை. வழக்கம் போல, வில்லன் மதுரையில் மிக வலுவான கை. ஆனால் அத்தனை தகிடுதத்தங்களையும் செய்கிறவர். அவரைச் சட்டத்தின் முன் நிறுத்தும் வழக்கமான தைரியமான போலீஸாக விஜய் சேதுபதி. அரைத்த மாவுதான் என்றாலும் விஜய் சேதுபதியின் ஆளுமைதான் படத்தை இரசிக்க வைக்கிறது. மிகத் துடிப்பாக நடித்திருக்கிறார். சிறுபிள்ளைத்தனமான பஞ்ச் டயலாக்குகளைத் தவிர்த்திருப்பது புத்திசாலித்தனம். படத்தின் அத்தனை திருப்பங்களும் நமக்குத் தெரிந்தவைதான் என்றாலும், படம் நம்மைக் கவரவே செய்கிறது.
10. தோழா
பிரெஞ்ச் படமான The Intouchables-இன் அதிகாரப்பூர்வமான தழுவல் தான் தோழா (aka Friend). கழுத்துக்குக் கீழே உடல் செயலிழந்த கோடீஸ்வரராகத் தெலுங்கு ஸ்டார் நாகார்ஜுனாவும், அவரைப் பார்த்துக் கொள்ளும் துறுதுறு உதவியாளராகக் கார்த்தியும் நடித்திருக்கிறார்கள். ஒரிஜினலுக்குக் கொஞ்சமும் சளைக்காத ரீமேக்தான். இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி வழக்கமான தென்னிந்திய சினிமா மசாலாக்களைப் பெரிதாக நம்பவில்லை. கார்த்திக்கும் நாகார்ஜுனாவுக்குமான சகோதரத்துவ நட்பு நன்றாக வேலை செய்கிறது. பிரகாஷ் ராஜ், கல்பனா எனப் பிறரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ஊப்பிரி (Breath) என்ற பெயரில் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் வெளியான இந்தப் படம் இரண்டு மொழிகளிலும் பெரிய வசூலைப் பார்த்தது.
9. அம்மணி
சமகாலத் தமிழ் சினிமாவில் அர்த்தமுள்ள படங்களைத் தரும் படைப்பாளிகளில் முக்கியமானவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். அவருடைய மூன்றாவது படமான அம்மணி மற்றுமொரு இரசிக்கத்தக்க, சமூக முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது. 90 நிமிடங்களே ஓடும் இந்தப் படம் கடினமாக உழைக்கும் ஓர் ஏழைச் சமூக சேவகரான சாலம்மாவுக்கும் 80-வயதைத் தாண்டியும் குப்பை பொறுக்கிப் பிழைக்கும் அம்மணிக்கும் உண்டான பிணைப்பைச் சொல்கிறது. முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் சுப்பு லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பு மிக அருமையாக இருக்கிறது. வியாபாரத்துக்காக எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காமல் படத்தை எடுத்திருப்பதால் ஆங்காங்கே தெரியும் சில குறைகளைக் கண்டும் காணாமல் விட்டு விடுகிறேன்.
8. மெட்ரோ
ஆனந்த் கிருஷ்ணனின் கிரைம் நாடகமான மெட்ரோ பரவலாகக் காணப்பட்டாலும் எவரும் எடுத்துப் பேசாத செயின் பறிப்பைச் சுற்றி நகர்கிறது. இந்தியின் உட்தா பஞ்சாப் போல முதலில் செயின் பறிப்பைத் தொழிலாகச் செய்யும் திருடர்களின் நெட்வொர்க்கை ஆழமாகக் காட்டுகிறது இந்தப் படம். பெரும்பாலும் கதை ஒரு செயின் பறிப்புக்குப் பின் நடந்த கோர சம்பவங்களின் ஃப்ளாஷ்பேக்கில் தான் நகர்கிறது. திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளும் சுமாரான நடிப்பும் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் படம் தமிழின் சிறந்த கிரைம் படங்களில் ஒன்றாக அமைந்திருக்கும். செயின் பறிப்புக் கும்பலின் தலைவனாக வரும் பாபி சிம்ஹாவைப் பார்த்தால் பயமே வரவில்லை. மாறாகச் சில இடங்களில் சிரிப்பு தான் வருகிறது. இருந்தாலும் படத்தில் இயக்கம் படம் நெடுக ஒரு அசம்பாவித உணர்வை அருமையாகத் தக்க வைத்திருக்கிறது.
7. இறுதிச் சுற்று
வழக்கமான கதையாக இருந்தாலும் சிறந்த நடிப்பால் உயர்ந்த தரத்தை எட்டியிருக்கும் 2016-ன் தமிழ்ப்படங்களில் மற்றுமொன்றாக அமைகிறது சுதாவின் இறுதிச் சுற்று (The final round). விதிகளை மதிக்காத கோபக்காரக் குத்துச்சண்டைப் பயிற்சியாளராக மாதவன், இளமையிலேயே இயல்பான திறமை வாய்க்கப் பெற்றிருக்கும் ரீத்திகா சிங்குக்குப் பயிற்சி அளித்து வெற்றியடையச் செய்ய என்ன பாடுபடுகிறார் என்பதுதான் கதை. படத்தில் வழக்கமான காதல் கோணம், சோகம், திறமையை மதிக்காத மேல் மட்ட அரசியல் எல்லாம் இருக்கிறது. இருந்தாலும் இறுக்கமான திரைக்கதை சுவாரசியமாகக் கதையைத் தாங்கிச் செல்கிறது. விரக்தியில் வேகும்போதாக இருக்கட்டும், கோபத்தில் சீறும்போதாக இருக்கட்டும், மாதவன் மீண்டும் ஒரு முறை தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபிக்கிறார். இவரை ஏன் தமிழ் சினிமா பெரிதாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற கேள்வி எழவே செய்கிறது. இந்தப் படம் இந்தியிலும் சாலா கடூஸ் என்ற பெயரில் ஒரே நேரத்தில் வெளிவந்தது.
6. தர்மதுரை
சீனு ராமசாமியின் தர்மதுரை ஒரு கிராமத்து டாக்டரின் வாழ்க்கையைச் சொல்கிறது. முதலில் தர்மதுரை (விஜய் சேதுபதி) அறிமுகமாகும்போது கிராமத்துக்கே அவமானமாகத் தான் அறிமுகமாகிறார். பின்னர் ஃப்ளாஷ்பேக்கில் அவரின் பெருமைகள் தெரிய வருகின்றன. அதன் பின் அவர் தன் பெருமையை மீட்டெடுக்கும் பயணம் தான் கதை. ஒரு கிராமத்துக் களத்தில் இருந்து எடுக்கக் கூடிய அத்தனை சமுதாயச் சிக்கல்களையும் (சாதி, வரதட்சணை முதலியன) சீனு ராமசாமி பேசுகிறார். வெளிநாட்டு வேலை மோகம் கொண்டவர்களுக்கு வெகு அழுத்தமான பாடம் கற்பிக்கப் படுகிறது. ஒரு கிராமத்து வாழ்வின் ஏற்ற இறக்கங்களை இயக்குநர் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். இருந்தாலும் ரொம்பவும் கருத்துச் சொல்வது கொஞ்சம் சலிக்க வைக்கிறது. திரைக்கதையின் துவக்கமும் வலுவானதாக இல்லை.
இருந்தாலும், மலையாளத்தின் மோகன்லால் பாணியிலான யதார்த்த நடிப்பில் விஜய் சேதுபதி இந்தப் படத்தைத் தனி ஆளாகத் தூக்கி நிறுத்துகிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துக்கு மற்றுமொரு பெரிய பலம். சமீபத்திய பாடல்களிலேயே வெகு நேர்த்தியாக இசையமைக்கப் பட்டு, காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் பாடல்களில் ஒன்றாக மக்கா கலங்குதப்பா இருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக தமன்னா கூட நன்றாக நடித்திருக்கிறார்.
5. இறைவி
கார்த்திக் சுப்புராஜின் இறைவி (Goddess) பாதிக்கப் பட்ட பெண்களின் கதைகளைக் கரிசனையான ஆண்களின் பார்வையில் சொல்கிறது. படத்தில் கருத்து சொல்வதற்கு எக்கச்சக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இருந்தாலும் பெரும்பான்மையான தமிழ் இயக்குநர்களைப் போலல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் மிக அடர்த்தியான ஒரு திரை வடிவத்தில் அழிக்க முடியாத ஒரு கனத்தை ஏற்படுத்துகிறார். படத்திற்கு மையக் கரு என்று ஒன்று இல்லவே இல்லை. இதை இன்ன மாதிரி படம் என்றும் சுலபமாக வகைப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் திரைக்கதை நேர்த்தியாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் வரும் அதீத சோகம் தான் படத்தில் உள்ள பெரிய குறை. ஒரு வகையில் படம் சொல்ல வரும் ஆழமான விஷயங்களை இந்த மிகைச் சோகம் வலுவிழக்க வைத்து விடுகிறது.
விஜய் சேதுபதி எதிர்பார்த்தபடியே மனதில் அறைகிறாற்போல நடித்திருக்கிறார். இயக்குநர்-நடிகர் எஸ்.ஜே.சூர்யா தன் நடிப்பில் பலரையும் ஆச்சரியப் படுத்தி இருக்கிறார். தோற்றுப்போன குடிகார இயக்குநரின் பாத்திரத்தை இவரை விடச் சிறப்பாக இன்னொருவரால் நடித்திருக்க முடியாது. எடுத்துக் கொண்ட வடிவம் படம் போகப் போகத் தன் நுணுக்கங்களை இழந்து போனாலும் தமிழ் சினிமா ஒரு ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கு இறைவி ஒரு சாட்சி.
4. குற்றமே தண்டனை
ஆழமான சமூகக் கருத்துகளையும் ஜனரஞ்சகமாகச் சொல்லும் அரிய கலை தெரிந்த தமிழ் இயக்குநர்களில் ஒருவர் மணிகண்டன். சின்ன பட்ஜெட்டில் வெளிவந்திருக்கும் இவரது குற்றமே தண்டனை (Crime is Punishment) ஹிட்ச்காக் பாணியில் சமூகப் பொருளாதாரச் சிக்கல்களையும் அறச் சிக்கல்களையும் சேர்த்துப் பின்னி இருக்கிறது. கதாநாயகன் ரவிச்சந்திரன் (விதார்த்) ஒரு கிரெடிட் கார்டு கம்பெனியில் கலெக்ஷன் பாயாகப் பணிபுரிகிறார். பார்வையின் மையத்தில் இருப்பவற்றைத் தவிரப் பிற விஷயங்களைச் சரியாகப் பார்க்க முடியாத பார்வைக் குறைபாடு அவருக்கு இருக்கிறது. கண் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிடில் பார்வையே போய்விடும் என்று மருத்துவர்கள் அவரைப் பயமுறுத்துகிறார்கள். சிகிச்சைக்குத் தேவையான 3 லட்ச ரூபாய் அவரால் கனவிலும் புரட்ட முடியாத தொகை.
அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு எதிர் வீட்டில் நடக்கும் ஒரு பெண்ணின் கொலை அவருக்குப் பணம் சம்பாதிக்க ஒரு வழியைக் காட்டுகிறது. அவர் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் அவரை ஒரு இறுக்கமான குகைக்குள் தள்ளுகின்றன. அவரின் பார்வையைப் போலவே அவரின் வாழ்க்கையும் ஒரு இருண்ட குகைக்குள் சிக்கிக் கொள்கிறது. குற்றத்தைச் செய்தது யார் என்ற பாணி கதைதான் என்றாலும் மணிகண்டன் அதில் ஒரு அறச்சிக்கலையும் நேர்த்தியாக நுழைத்திருக்கிறார். சில திருப்பங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் மணிகண்டனுக்காகப் படத்தைப் பார்க்கலாம்.
3. ஜோக்கர்
ராஜு முருகனின் ஜோக்கர் ஒரு அற்புதமான படமெல்லாம் இல்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போதனைகளைச் சொல்லும், புலம்பலுக்கும் கேலிக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு படம்தான் இது. இருந்தாலும் இந்தப் படம் தற்காலத்துக்குத் தேவையான படம். அனைத்துக் குற்றங்களையும் சினிமா பாணியில் திருத்தி விடாமல் நாட்டைத் திருத்தும் யதார்த்தத்தில் உள்ள சிக்கல்களைச் சொல்லும் படமாக அமைகிறது இந்தப் படம். ஒரு ஷங்கர் படத்துக்கு உண்டான அத்தனை அம்சங்களும் ஜோக்கர் படத்தில் இருக்கின்றன. ஆனால் ஷங்கர் படங்களில் வரும் அசாதாரணமான ஹீரோயிசம் இல்லாமல் ராஜு முருகனின் கதாநாயகன் அசட்டுத்தனமான கோமாளியாகவே இருக்கிறான். படத்தின் காட்சிகளும் தளமும் சீக்கிரம் சலிப்பு தட்டினாலும் குரு சோமசுந்தரத்தின் அபாரமான நடிப்பால் இந்தப் படம் என்னை மிகவும் கவர்ந்தது. கருத்து சொல்லியே ஆகவேண்டும் என்று அடம்பிடித்தாலும் கூட சோமசுந்தரத்தின் நடிப்பு இரசிக்க வைக்கிறது. ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் ஷங்கர் பாணியில் சோகத்தைப் பிழியாமல் இயக்குநர் ராஜு முருகன் சோகத்தையும் இயல்பாகக் காட்சிப் படுத்தி இருக்கிறார்.
2. ஆண்டவன் கட்டளை
மணிகண்டனின் ஜனரஞ்சகமான கருத்துப் படமான ஆண்டவன் கட்டளை 2016-இன் எதிர்பாராத பரிசுகளில் ஒன்று. கடனில் சிக்கித் தவிக்கும் தெற்கத்திக் கதாநாயகன் வெளிநாடு போய்ச் சம்பாதிக்கச் செய்யும் தில்லுமுல்லு எல்லாம் தமிழுக்குப் புதிதல்ல. இருந்தாலும் எப்போதும் போல மணிகண்டன் அவரின் கதாபாத்திரங்களுக்கு ஒரு தனித்துவமான நளினத்தைக் கொடுத்து விடுகிறார்.
காக்கா முட்டை, குற்றமே தண்டனை போலவே தகுதிக்கு மீறிய ஆசைகள், குறுக்கு வழிகள், அவற்றின் விளைவுகள் ஆகியவைதான் இந்தப் படத்தின் மையக் கரு. இருந்தாலும் முகத்தில் அறைந்தாற் போல கருத்து சொல்ல முயலவில்லை இயக்குநர்.
ஆண்டவன் கட்டளை 2016-இல் விஜய் சேதுபதிக்கு ஐந்தாவது படம். பெரிய திரையில் ஒரே வருடத்தில் ஐந்து முறை பார்த்தாலும் அவரின் முகம் அலுக்கவில்லை. சாதாரண மனிதனின் பாத்திரத்தை அனாயசமாகச் செய்கிறார் இவர். இவரின் அடுத்தடுத்த படங்களின் மேல் ஒரு பெரிய எதிர்பார்ப்பு வருகிறது எனக்கு.
1. விசாரணை
ஒரு திரையரங்கில் மக்கள் எதிர்கொள்ளத் தயங்கும் உணர்ச்சிகளான பயம், கையாலாகாத்தனம், நேர்மையான கோபம் ஆகிய உணர்ச்சிகளைப் பொட்டிலறைந்தாற் போல உருவாக்குகிறது வெற்றிமாறனின் விசாரணை. அமைப்பின் அடிமட்டத்தில் சிக்கித் தவிக்கும் அப்பாவிகளைப் பற்றிய படம் இது. சந்திரகுமாரின் வலி மிக்கக் கதையான லாக்கப் நாவலைக் களமாகக் கொண்டு நாம்
அடிக்கடி கேள்விப்படும் போலீஸ் அராஜகத்தைக் காட்சிப் படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன். பாண்டி (தினேஷ்) மற்றும் நண்பர்களுக்கும் ஆடிட்டருக்குமான (கிஷோர்) ஊடாடல் பலரையும் கொஞ்சம் இருக்கையில் நகர வைத்தாலும், ஒன்றன் பின் ஒன்றாகக் கனமான உண்மைகளைச் சொல்லும் திரைக்கதையில் இது ஒரு திருஷ்டிப் பொட்டாகவே இருக்கிறது. நம் உணர்ச்சிகளைப் படம் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கிறது. போலீஸ், மீடியா போன்ற சக்திகள் மக்களை ஏமாற்ற உருவாக்கும் ஒரு பெரிய திரைக்குப் பின்னால் மறைந்து சென்று நடைமுறை அவலங்களை அப்பட்டமாகக் காணும் ஒரு அனுபவமாக அமைகிறது விசாரணை.
சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களின் அலட்சியமும் பொறுப்பற்ற தன்மையும் நம்மை உறைய வைக்கின்றன. இந்தப் படத்துக்காகத் தேசிய விருது பெற்ற சமுத்திரக்கனி நல்ல மனது படைத்ததற்காக ஓரம் கட்டப்படும் போலீஸ்காரர். அவரின் நடிப்பிலும் உணர்ச்சிகள் கொந்தளிக்காமல், படத்தைப் பார்ப்பவர்களைப் போலவே உள்ளுக்குள் ஏதோ பிசைவதோடு நின்று விடுகிறது.
சிறப்பு இடம் – கர்மா
கர்மா ஒரே அறையில் நடக்கும் பரீட்சார்த்தமான துப்பறியும் படம். மாற்றுத் திரைப்படத் தயாரிப்பாளர் அரவிந்த் ராமலிங்கம் தமிழில் அறிமுகமாகும் இந்தப் படம் இணையத்தில் வெவ்வேறு தளங்களில் வெளியானது. இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்தப் படத்தின் சுட்டியை வெளியிட்டார். மேட்ரிட் திரை விழாவிலும் ஹாலிவுட் ஸ்கை திரை விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது.
அருண் குமார்
The english version of this article is here:
1 thought on “இறைவி – விசாரணை வரை – 2016இன் 15 சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்”